செய்திகள்

மோடியால் நாட்டின் பாதுகாப்பு உயர்ந்துள்ளது - நிர்மலா சீதாராமன்

Published On 2019-04-16 08:58 IST   |   Update On 2019-04-16 08:58:00 IST
பிரதமர் மோடியால் நாட்டின் பாதுகாப்பு உயர்ந்துள்ளது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். #LokSabhaElections2019 #NirmalaSitharaman
சிவமொக்கா:

கர்நாடகத்தில் 2-வது கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் சிவமொக்காவும் ஒன்று. அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம்.பி.யுமான ராகவேந்திரா மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் ராகவேந்திரா எம்.பி.யை ஆதரித்து மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சிவமொக்கா டவுனில் பிரசாரம் மேற்கொண்டார்.

பின்னர் அப்பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேசும் போது கூறியதாவது:-

மோடி நமது நாட்டிற்கு பிரதமராக கிடைத்து உள்ளார். நமது நாட்டின் பெருமை, வலிமை, பொருளாதார வளர்ச்சி எப்படி உயர்ந்து உள்ளதோ அதுபோல நாட்டின் பாதுகாப்பும் பல மடங்கு உயர்ந்து உள்ளது.



கிராமபுறங்களில் கழிவறை கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா அடையாத வளர்ச்சி, மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் வளர்ச்சி அடைந்து உள்ளது.

மீண்டும் மோடி பிரதமர் ஆனால் 2022-ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் இரட்டிப்பாகும். 2047-ம் ஆண்டில் நாடு முன்னேறிய நாடுகளில் முதல் இடத்தை பிடிக்கும். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

அதற்கு இந்தியா சார்பில் உடனடியாக தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்தை பிடுங்கி எறியும் ஆற்றல் படைத்தவர் மோடி. இந்த தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் ராகவேந்திராவை வெற்றி பெற செய்வதன் மூலம் மோடியின் கரத்தை நாம் அனைவரும் பலப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #NirmalaSitharaman

Tags:    

Similar News