செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு- தலைமை தேர்தல் ஆணையரிடம் சந்திரபாபு நாயுடு புகார்

Published On 2019-04-13 08:50 GMT   |   Update On 2019-04-13 08:50 GMT
வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் அளித்துள்ளார். #ChandrababuNaidu
புதுடெல்லி:

ஆந்திராவில் கடந்த 11-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 400 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. இதனால் சில பகுதிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதேபோல் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகவும் சில பூத்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.



இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து, புகார் மனு கொடுத்தார். அதில், ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காதது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தலின்போது பிரச்சினை செய்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். #ChandrababuNaidu
Tags:    

Similar News