செய்திகள்

தமிழகத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2019-04-12 09:12 GMT   |   Update On 2019-04-12 09:12 GMT
தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி 2.2 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. #Unemployment
புதுடெல்லி:

மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் தற்போது நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி புதிதாக கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.

இதற்கு முன்பு 2011-12-ல் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தது. இப்போது 6 ஆண்டுக்கு பிறகு 2017-18 நிதி ஆண்டில் கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.

இதில் தேசிய அளவிலும் ஒவ்வொரு மாநில அளவிலும் வேலை வாய்ப்பின்மை மிகவும் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

தேசிய அளவில் 6 ஆண்டுக்கு முன்பு வேலை வாய்ப்பின்மை 2.3 சதவீதமாக இருந்தது. அது தற்போது 6.1 சதவீதமாக அதிகரித்து உள்ளது.



தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி வேலை வாய்ப்பின்மை 2.2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதாவது முந்தைய அளவை விட 5.4 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

நாட்டிலேயே அதிக பட்சமாக கேரள மாநிலத்தில் தான் வேலை வாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது.

அங்கு 6 ஆண்டுக்கு முன்பு இதன் சதவீதம் 6.7 ஆக இருந்தது. இப்போது 11.4 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

அதற்கு அடுத்த இடத்தில் அரியானா உள்ளது. அங்கு 2.8 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 8.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

வேலைவாய்ப்பின்மை அதிகம் இல்லாத மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு 1.5 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 3.3 சதவீதமாக இருக்கிறது.

அதேபோல மராட்டிய மாநிலத்தில் 1.0 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 4.5 சதவீதமாக இருக்கிறது. #Unemployment
Tags:    

Similar News