செய்திகள்

பெரிய பொய்யரான மோடியின் கவர்ச்சி பேச்சுகளை யாரும் நம்ப வேண்டாம்: குமாரசாமி

Published On 2019-04-01 02:25 GMT   |   Update On 2019-04-02 09:28 GMT
பெரிய பொய்யரான பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சி பேச்சுகளை யாரும் நம்ப வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #kumaraswamy #ParliamentElection
பெங்களூரு :

பெங்களூரு புறநகரில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி பேசும்போது கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சி பேச்சுகளை யாரும் நம்ப வேண்டாம். நரேந்திர மோடி பெரிய பொய்யர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வில்லை. தேர்தல் வரும் நிலையில் ‘கிருஷி சம்மன்’ என்ற திட்டத்தை அவர் செயல்படுத்தி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார். முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கியுள்ளார்.

இந்த திட்டத்துக்காக கர்நாடகத்தில் இருந்து 10 லட்சம் விவசாயிகளின் விவரங்களை அனுப்பினேன். இதில் வெறும் 17 பேருக்கு மட்டும் பயன் கிடைத்துள்ளது. ஆனால், நரேந்திர மோடி கர்நாடக அரசை குற்றம்சாட்டுகிறார்.



கர்நாடக அரசு 45 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 44 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இதுவரை 15 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் அரைநிர்வாண போராட்டம் உள்பட வெவ்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களை நரேந்திர மோடி கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் பேச்சை அவர் கேட்கவில்லை. இதன்மூலம், விவசாயிகள் மீது நரேந்திர மோடிக்கு அக்கறை இல்லை என்பது தெரிகிறது. பா.ஜனதா கட்சி விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது.

பா.ஜனதா கட்சி கன்னட மக்களை ஏமாற்றி உள்ளது. மதசார்ப்பற்ற கட்சிகளான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த கூட்டணி வேட்பாளர்களை பொதுமக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கொள்கைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். #kumaraswamy #ParliamentElection
Tags:    

Similar News