செய்திகள்

பீகார் பாராளுமன்ற தேர்தலில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளராக கண்ணையா குமார் போட்டி

Published On 2019-03-24 14:21 GMT   |   Update On 2019-03-24 14:21 GMT
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கண்ணையா குமார் பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளராக களமிறங்கினார். #CPIcandidate #KanhaiyaKumar #Begusaraicandidate #LokSabhaelections
பாட்னா:

ஜே.என்.யூ. என்றழைக்கப்படும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராக பொறுப்பு வகித்த கண்ணையா குமார் கடந்த 2016-ம் ஆண்டு ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்த  கண்ணையா குமார் பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து இடதுசாரி சிந்தனைகளை முன்னிறுத்தி பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக  கண்ணையா குமார் போட்டியிடுவார் என அக்கட்சியின் பீகார் மாநில பொதுச்செயலாளர் சத்யநாரயண சிங் இன்று அறிவித்துள்ளார். 

சாதி, மதம் மற்றும் சமுதாயங்களில் பெயரால் நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பிவரும் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜகவின் நிஜமுகத்தை தோலுரித்து காட்டிய கண்ணையா குமாரை இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். பீகாரில் உள்ள மற்ற தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்-குக்கு எதிராக கண்ணையா குமார் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #CPIcandidate #KanhaiyaKumar #Begusaraicandidate #LokSabhaelections 
Tags:    

Similar News