செய்திகள்

‘நானும் காவலர்’ கோ‌ஷத்தை மோடி கைவிட வேண்டும் - சத்ருகன் சின்கா

Published On 2019-03-22 08:01 GMT   |   Update On 2019-03-22 08:01 GMT
‘நானும் காவலர்’ கோ‌ஷத்தை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்கா கூறியுள்ளார். #ShatrughanSinha #PMModi

புதுடெல்லி:

ரபேல் விவகாரத்தில் ‘நாட்டின் காவலர்’ என்று தன்னை கூறிக் கொண்ட பிரதமர் மோடி அரசுப் பணத்தை களவாடி தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு அளித்து விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘நானும் காவலர்’ என்ற கோ‌ஷத்தை பிரதமர் மோடி இணைய தளம் மூலம் பரப்பி வருகிறார். பா.ஜனதா ஆதரவாளர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ‘காவலர்’ என்ற அடைமொழியை சமூக வலைதளங்களில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பா.ஜனதா எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் மோடி ‘நானும் காவலர்’ என்ற கோ‌ஷத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று பணிவுடன் கூறுகிறேன். ‘காவலரே களவாடிவிட்டார்’ என்ற எதிர்கட்சிகளின் கோ‌ஷத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அதை பயன்படுத்த வேண்டாம்.


அந்த கோ‌ஷத்தை நீங்கள் பயன்படுத்தினால் ரபேல் பேரம் குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய, இன்னும் விடையளிக்கப்படாத கேள்விகளை மக்களுக்கு தொடர்ந்து நினைவுப் படுத்திக் கொண்டே இருக்கும். அந்த கேள்விகளுக்கான பதில்களை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக போதிய முன்னேற்பாடுகள் இன்றி திடீரென்று 25 லட்சம் காவலாளிகளிடம் பிரதமர் மோடி உரையாற்ற வேண்டிய அவசியம் என்ன? அதுவும் 25 லட்சம் காவலாளிகள் என்ற எண்ணிக்கை எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது.

மோடியின் இந்த தற்காப்பு முயற்சியை மக்கள் ரசிக்கப் போவதில்லை. அதிலும் வறுமையில் வாடும் காவலாளிகள் நிச்சயம் ரசிக்க மாட்டார்கள்.

அவர்களிடம் அர்த்தமற்ற அலங்கார வார்த்தைகளை பேசியதை விட அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, போதுமான அளவுக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயிப்பது போன்றவை குறித்து பிரதமர் மோடி பேசி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ShatrughanSinha #PMModi

Tags:    

Similar News