செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி பலி

Published On 2019-03-21 22:17 GMT   |   Update On 2019-03-21 22:17 GMT
காஷ்மீர் பண்டிபோரா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். பணய கைதியாக பிடித்துவைத்திருந்த ஒருவரை மீட்டனர். #JammuKashmir #ArmyEncounter
ஸ்ரீநகர்:

காஷ்மீர் பண்டிபோரா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். பணய கைதியாக பிடித்துவைத்திருந்த ஒருவரை மீட்டனர். மற்றொருவரை மீட்க முயற்சி நடக்கிறது.

காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் மிர் மொஹல்லாவில் பயங்கரவாதிகள் ஒரு இடத்தில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீசாரின் சிறப்பு படை, ராணுவம், மத்திய ஆயுதப்படை போலீசார் அடங்கிய கூட்டுக்குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை நெருங்கியதும் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன், பயங்கரவாதிகள் பணய கைதியாக பிடித்துவைத்திருந்த அப்பாவி ஒருவரை மீட்டனர். மேலும் ஒருவர் அங்கு சிக்கியிருப்பதாக தெரியவந்தது. அவரை மீட்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துப்பாக்கி சண்டை நடைபெறும் தகவல் அறிந்து போராட்டக்காரர்கள் அந்த பகுதிக்கு விரைந்துவந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கினர். இதைத்தொடர்ந்து அவர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் முதலில் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து சிறு குண்டுகளால் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்.  #JammuKashmir #ArmyEncounter
Tags:    

Similar News