செய்திகள்

கோவா - நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி

Published On 2019-03-20 07:51 GMT   |   Update On 2019-03-20 07:51 GMT
கோவா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. #GoanewCM #Goafloortest #PramodSawant
பனாஜி:

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான கூட்டம் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கோவா புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார். 
 
கோவாவின் புதிய முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

முன்னதாக, கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து கடிதம் அளித்திருந்தனர்.

இதற்கிடையே, முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த், ‘என்னுடன் 2 துணை முதல் மந்திரிகளாக விஜய் சர்தேசாய், சுதின் தவில்கர் ஆகியோர் விரைவில் பதவி ஏற்கவுள்ளனர். இந்த அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும். அதில் பா.ஜ.க. அரசு வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார்.



இந்நிலையில்,  கோவா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.

கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க மொத்தம் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. அவருக்கு எதிராக 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. அரசு வெற்றி பெற்றது. #GoanewCM #Goafloortest  #PramodSawant
Tags:    

Similar News