செய்திகள்

காலியா திட்டத்தை தடுக்க கூடாது - தேர்தல் கமிஷனுக்கு பிஜு ஜனதா தளம் கோரிக்கை

Published On 2019-03-16 17:18 IST   |   Update On 2019-03-16 17:18:00 IST
ஒடிசாவில் விவசாயிகள் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறும் ’காலியா’ திட்டத்தை தடுக்க கூடாது என அம்மாநில தேர்தல் கமிஷனுக்கு ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது. #BJD #CEO #KALIAassistance
புவனேஸ்வர்:

ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசில் விவசாயிகள் நலனுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'காலியா’ என்னும் சிறப்பு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள சுமார் 35 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி சில லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பல லட்சம் பேருக்கு பணம் செலுத்தப்படவுள்ளது.



இதற்கிடையில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்கள் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இந்த நிதியுதவியை நிறுத்தி வைக்க வேண்டும் என பாஜக மற்றும் இதர கட்சிகளின் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் தரப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பாஜகவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து ’காலியா’ திட்டத்தை தடுக்க கூடாது என அம்மாநில தேர்தல் கமிஷனுக்கு ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் சார்பில் இன்று கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. #BJD #CEO #KALIAassistance
Tags:    

Similar News