செய்திகள்

டெல்லியில் இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி

Published On 2019-03-16 06:40 GMT   |   Update On 2019-03-16 10:42 GMT
டெல்லியில் இரண்டாவது கட்டமாக பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த நர்த்தகி நட்ராஜ், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. #PadmaAwards #RamNathGovind
புதுடெல்லி:

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 112 பேர் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இதையடுத்து கடந்த 11ம் தேதி, முதல் கட்டமாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 56 பேருக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இதில் திரைத்துறை சார்பில் மோகன் லால், பிரபுதேவா, டிரம்ஸ் மணி உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றனர்.

இந்நிலையில் மீதமுள்ளவர்களுக்கு இன்று இரண்டாவது கட்டமாக பத்ம விருதுகள் வழக்கப்பட்டன. இதில் விளையாட்டுத்துறையில்  இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, வில்வித்தைக்காக  பாம்பியாலா தேவி லைஷ்ராம், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்தி சிங் ஆகியோருக்கும், தபேலா கலைஞர் சுவப்பன் சவுத்ரி,  பொது விவகாரங்கள் துறை எச்.எஸ்.போல்கா,  சேரி பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு பள்ளி நடத்தும், சமூக சேவை மற்றும் மலிவான கல்விக்காக பிரகாஷ் ராவ்,  நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.



தமிழகத்தைச் சேர்ந்த நடன கலைஞர் நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டியம்), ராமசாமி வெங்கடசாமி (மருத்துவம்) ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து, கானா பாடகி தேஜன் பாய் பத்ம விபூஷண் விருது பெற்றார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, உணவுத்துறை ஆகியவற்றிற்காக மகாஷை தரம்பால் குலாத்தி, மலையேறும் பணிக்காக பச்சேந்திரி பால் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ் நாத் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். #PadmaAwards #RamNathGovind

Tags:    

Similar News