செய்திகள்

மாண்டியா தொகுதியில் குமாரசாமி மகனை எதிர்த்து சுயேச்சையாக போட்டி - சுமலதா அறிவிப்பு

Published On 2019-03-14 07:30 GMT   |   Update On 2019-03-15 05:16 GMT
மாண்டியா தொகுதியில் குமாரசாமி மகனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவது உறுதி என்று நடிகை சுமலதா அறிவித்துள்ளார். #ParliamentElection #MandyaConstituency #Sumalatha
பெங்களூர்:

கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மறைந்த அம்பரீஷ் மனைவியான நடிகை சுமலதா பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்.

ஆனால் மாண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இதனால் சுமலதாவிடம் வேறு தொகுதியில் போட்டியிடுமாறு சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தும் அதை சுமலதா ஏற்கவில்லை.

நேற்று மாண்டியா தொகுதியில் சுமலதா தனது மகனுடன் சென்று தொகுதி முழுக்க ஆதரவு திரட்டினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவேன். மாண்டியா மாவட்டத்தின் அனைத்து காங்கிரஸ் பிரமுகர்களும், அம்பரீஷ் ரசிகர்களும் எனக்கு ஆதரவு தந்து பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

எனவே நான் தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிலையில் அவரை கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் சந்தித்து பேச இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுமலதாவுக்கு ஆதரவு கொடுக்க பா.ஜனதா முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா கூறியதாவது:-

பா.ஜனதாவில் சேருவது தொடர்பாக நடிகை சுமலதா தனது நிலைப்பாட்டை அறிவித்த பிறகு கட்சி மேலிடத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். அம்பரீஷ் உயிரோடு இருந்தபோது அவரை பாராட்டி வந்த முதல்-மந்திரி குமாரசாமி தற்போது அவரது குடும்பத்தை விமர்சித்து வருகிறார். மாண்டியா தொகுதி மக்கள் குமாரசாமிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இன்று மாண்டியா தொகுதியில் ஜே.டி.எஸ். தேர்தல் பிரசாரமும், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடக்கிறது. இதில் தனது மகனை அறிமுகப்படுத்தி குமாரசாமி பேச உள்ளார்.

கடந்த வாரம் நிகிலின் தாயாரும், எம்.எல்.ஏ.வுமான அனிதா மாண்டியா தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து தனது மகனை நிர்வாகிகளிடம் அறிமுகம் செய்தார். கோவில்களுக்கும் அழைத்து சென்று பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #MandyaConstituency #Sumalatha

Tags:    

Similar News