செய்திகள்

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது

Published On 2019-02-25 14:25 GMT   |   Update On 2019-02-26 02:41 GMT
புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் உரிமையாளரை தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். #Pulwamaattack #NIAinvestigators #MarutiEeco #Pulwamaattackcar #SajjadBhat
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் அனுதாபியான ஆதில் என்பவன் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
 
ஆயிரம் கிலோவுக்கு அதிகமான வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட காரை பயன்படுத்தி இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பின்னர், தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த தடயவியல் வல்லுனர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் சுமார் 370 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிப்பொருளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி ஆதில் என்பவன் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இதற்கு முன்னர் 3 முறை தாக்குதலுக்கான ஒத்திகை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகின.

காஷ்மீர் மாநில போலீசாரின் விசாரணையில் இருந்த புல்வாமா தாக்குதல் தொடர்பான வழக்கை கடந்த 23-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை ஏற்றுக் கொண்டது. 

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட கார் மற்றும் அதன் உரிமையாளரை தேசிய புலனாய்வு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மாருதி இக்கோ (Maruti Eeco) ரகத்தை சேர்ந்தது. அதன் உரிமையாளரான சாஜத் பட் என்பவன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டம், பிஜ்பேஹாரா பகுதியை சேர்ந்தவன். 

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் தலைமறைவாகி விட்ட இவனும் ஜெய்ஷ்-இ-முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன். கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி முன்னர் சமூக வலைத்தளங்களில் இவன் சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளான் என்று தேசிய புலனாய்வு படையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Pulwamaattack #NIAinvestigators #MarutiEeco #Pulwamaattackcar #SajjadBhat
Tags:    

Similar News