செய்திகள்

காஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-02-22 06:28 GMT   |   Update On 2019-02-22 06:28 GMT
நாடு முழுவதிலும் உள்ள காஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SC #Kashmiristudents #PulwamaAttack
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைக் கண்டித்து காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.



இந்நிலையில், வழக்கறிஞர் கொலின் கான்சல்வ்ஸ், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள காஷ்மீரி மாணவர்கள் தாக்கப்படுவதாகவும், தாக்குதலை தடுத்து நிறுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும் மனுதாரர் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், காஷ்மீரி மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உடனே தடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த  நீதிபதிகள், நாடு முழுவதிலும் உள்ள காஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும், தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், காஷ்மீரி மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசு மற்றும் 10 மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SC #Kashmiristudents #PulwamaAttack
Tags:    

Similar News