செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்பில்’ கருத்தை வெளியிட்ட ஆசிரியை கைது

Published On 2019-02-18 05:32 GMT   |   Update On 2019-02-18 05:32 GMT
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்பில்’ கருத்தை வெளியிட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டார். #JelakaMamadapur #PulwamaAttack
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் சவதத்தி தாலுகா கடபி சவாபுரா கிராமத்தில் வசித்து வருபவர் ஜீலிகாபீ மமதாபூர் (வயது 25) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து அவர் தனது ‘வாட்ஸ்-அப்பில்’ ‘பாகிஸ்தான் கி ஜெய்ஹோ’ என்று பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த அந்த கிராம மக்கள் அவருடைய வீட்டு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும், அவருடைய வீட்டு மீது கல்வீசிய அவர்கள் வீட்டு வாசலில் தீவைத்தனர். இதனால் வாசலின் முன் பகுதி தீப்பற்றி எரிந்தது. இதற்கிடையே, சம்பவம் குறித்து அறிந்த முருகோடு போலீசார் தீயை அணைத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அவர்கள் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து சென்று விசாரித்தனர்.

இந்த விசாரணையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர் தனது ‘வாட்ஸ்-அப்பில்’ பதிவு செய் ததை ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து முருகோடு போலீசார் ஆசிரியை ஜீலிகாபீ மமதாபூரை கைது செய்தனர். அவர் மீது தேசத்துரோகம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான ஜீலிகாபீ மமதாபூர் வீட்டுக்கு தீவைத்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது பற்றியும் முருகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #JelakaMamadapur #PulwamaAttack
Tags:    

Similar News