செய்திகள்

புல்வாமா தாக்குதலை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம்- ஜம்முவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு

Published On 2019-02-15 11:48 GMT   |   Update On 2019-02-15 11:48 GMT
புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்களின் உயிரை பறித்த தாக்குதலை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஜம்முவின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #CurfewinJammu #Pulwamaattack
ஜம்மு:

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உள்பட மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த 40 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள நிலையில் கொடூரமான இந்த  தாக்குதலை கண்டித்து ஜம்மு பகுதிக்கு உள்பட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜம்முவின் சில பகுதிகளில் ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக, ஜம்மு நகருக்கு உட்பட்ட ஜிவல் சவுக், புரானி மண்டி, ரேஹாரி, சக்திநகர், பக்கா டங்கா, ஜானிப்பூர், காந்திநகர், பக்‌ஷிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தானை கண்டித்து பஜ்ரங் தள், சிவசேனா கட்சியினரும் பொதுமக்களும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


குஜ்ஜார் நகர் பகுதியில் வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் சாலைகளில் சிலர் டயர்களை எரித்து போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தின்றி பல சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஜம்மு-காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், தெலுங்கானா மாநில வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், ஜம்மு பகுதியில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் இரு சமுதாயத்தினருக்கு இடையிலான மோதலாக திசை திரும்பலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு போலீஸ் துணை கமிஷனர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையில் ராணுவத்தின் உதவி கோரப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #CurfewinJammu #Pulwamaattack
Tags:    

Similar News