செய்திகள்

சிபிஐ அதிகாரியை மாற்றிய விவகாரம்- நாகேஸ்வரராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்

Published On 2019-02-12 08:25 GMT   |   Update On 2019-02-12 08:25 GMT
அதிகாரியை பணியிட மாற்றம் செய்த வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. #CBI #NageswaraRao
புதுடெல்லி:

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் மற்றும் சிறார்கள், பெண்கள், முதியோர் காப்பகங்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் முன்அனுமதி பெறாமல் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது.



இந்த நிலையில் வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரி ஏ.கே.சர்மா, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தலைமை நீதிபதி அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்தது. அப்போது, சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட 2 அதிகாரிகள், ஏ.கே.சர்மாவை பணியிடமாற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நாகேஸ்வரராவ் உள்ளிட்ட 2 அதிகாரிகளுக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருவரும் பிப்ரவரி 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாகேஸ்வர ராவ் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். மேலும் சிபிஐ அதிகாரியை மாற்றியதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். இருப்பினும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக இரண்டு அதிகாரிகளுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #CBI #NageswaraRao

Tags:    

Similar News