செய்திகள்

குஜ்ஜார் இடஒதுக்கீடு - ராஜஸ்தானில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

Published On 2019-02-10 09:28 GMT   |   Update On 2019-02-10 10:17 GMT
கல்வி, வேலைவாய்ப்பில் குஜ்ஜார் இன மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு ராஜஸ்தானில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தால் பதற்றம் நிலவுகிறது. #Gujjarsdharna #dharnaonrailtracks
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  

இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த 2017-ம் ஆண்டில் அம்மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.



இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தின்மீது தற்காலிக கூடாரங்களை அமைத்து அவர்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நேற்றும் நேற்று முன்தினமும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் 3 ரெயில்கள் வெவ்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஒரு ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் போராட்டத்தால் சில இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

குறிப்பாக, இன்று பிற்பகல் தோல்பூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த வந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த ஆத்திரத்தில் சிலர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இப்பகுதியில் அசம்பாவிதம் மேலும் அதிகரிக்காத வகையில் கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். #Gujjarsdharna #dharnaonrailtracks  
Tags:    

Similar News