செய்திகள்

விவிஐபி ஹெலிகாப்டர் வழக்கு- இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீன் கோரி மனு

Published On 2019-02-08 10:48 GMT   |   Update On 2019-02-08 10:48 GMT
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
புதுடெல்லி:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில்  துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடம் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார். விசாரணைக் காவல் முடிவடைந்தபின்னர், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்குகளில் ஜாமீன் கோரி கிறிஸ்டியன் மைக்கேல் இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், கடந்த டிசம்பர் 22ம் தேதி முதல் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், விசாரணை முடிந்து 60 நாட்கள் ஆன நிலையில் தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததன் காரணம் குறித்து 12ம் தேதிக்குள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்கும்படி சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையையும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI   

Tags:    

Similar News