செய்திகள்

சபரிமலை விவகாரம்- சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

Published On 2019-02-06 06:37 GMT   |   Update On 2019-02-06 06:37 GMT
சபரிமலை வழக்கின் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசாரமாக வாதம் நடைபெற்றது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
புதுடெல்லி:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.  புதிய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சீராய்வு மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நரிமன், கான்வில்கர், சந்திரச்சூட் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரணை செய்யப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஆதரவாக தங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு நான்கு பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். கேரளாவை சேர்ந்த  ரேஷ்மா, ஷானிலா, பிந்து மற்றும் கனக துர்கா இந்த மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

ரேஷ்மா, ஷானிலா  இருவரும் இரண்டு முறை கோவிலுக்குள் நுழைய முயன்றவர்கள். பிந்து, கனகதுர்கா இருவரும் முதல்முறையாக கோவிலுக்குள் சென்று வந்தவர்கள் ஆவார்கள்.



இந்நிலையில் சீராய்வு மனுக்கள் மற்றும் புதிய மனுக்கள் என 60க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்தியது. நாயர் சேவா சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் கே.பராசரன் ஆஜராகி வாதாடினார். அப்போது, மத நம்பிக்கை காரணமாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை என்றும், தீண்டாமையால் அல்ல என்றும் குறிப்பிட்டார். மரபுகளை பின்பற்றி யார் வேண்டுமானாலும் சபரிமலைக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரோகிண்டன் நாரிமன், வெறும் தீண்டாமை விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பல விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அதன்பின்னர் தேவம்போர்டு முன்னாள் தலைவர் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடினார். தொடர்ந்து காரசாரமான வாதம் நடைபெறுகிறது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
Tags:    

Similar News