செய்திகள்

சி.பி.ஐ.யை செயல்பட விடுங்கள் - மம்தாவுக்கு ராஜ்நாத்சிங் வேண்டுகோள்

Published On 2019-02-04 20:05 GMT   |   Update On 2019-02-04 20:05 GMT
மேற்கு வங்காள நிலவரம் அபாயகரமாக உள்ளது. மம்தா பானர்ஜி, சி.பி. ஐ.யை செயல்பட விட வேண்டும் என்று ராஜ்நாத்சிங் வலியுறுத்தினார். #MamataBanerjee #RajnathSingh
புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், மேற்கு வங்காள பிரச்சினையை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் எழுப்பினார். அவருக்கு பிஜூ ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் செயல்பட்டனர் என்று உடனடியாக முடிவுக்கு வந்து விடுவது தவறு. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகே இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்துக் கொண்டது.



போலீஸ் கமிஷனருக்கு பலதடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. அவர் ஒத்துழைக்காததால்தான், சி.பி.ஐ. இந்த நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் சுற்றி வளைத்து, பணி செய்யவிடாமல் தடுத்தது, அரசியல் சட்ட சீர்குலைவுக்கு வழிவகுத்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் நடந்தவை அனைத்தும் முன்எப்போதும் இல்லாதது. அங்குள்ள நிலவரம் அபாயகரமானது. முதல்-மந்திரியே போராட்டம் நடத்துவதால், குழப்பநிலையை நோக்கி நிலைமை சென்றுள்ளது.

மாநில அரசின் உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அங்குள்ள நிலைமை, அரசியல் சட்ட எந்திர சீர்குலைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் எந்த பகுதியிலும் இயல்பு நிலையை உண்டாக்க நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.

நாட்டின் விசாரணை அமைப்புகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல், கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, சி.பி.ஐ. தங்கள் கடமையை செய்ய விடுமாறு மம்தா பானர்ஜி அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

இதற்கிடையே, மம்தா பானர்ஜி தர்ணா குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இது, நரேந்திர மோடியின் நெருக்கடி நிலை அல்ல, மம்தா பானர்ஜியின் நெருக்கடி நிலை. சி.பி.ஐ.யிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மம்தா தர்ணா போராட்டம் நடத்துகிறார்.

அங்கு சட்டம்-ஒழுங்கும், அரசியல் சட்ட ஒழுங்கும் முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இருப்பினும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு இப்போதைக்கு கேட்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News