செய்திகள்

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி - தலைவர்கள் இரங்கல்

Published On 2019-01-29 07:04 GMT   |   Update On 2019-01-29 07:04 GMT
முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், ராணுவ மந்திரியாக பதவி வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், தொழில் துறை, ரெயில்வே போன்ற துறைகளிலும் மந்திரி பதவிகளை வகித்துள்ளார். அரசியல்வாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முக தன்மைகளை கொண்ட இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட சூழலில் அதனை கடுமையாக எதிர்த்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பின் பீகாரின் முசாபர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொழிற்துறை மந்திரியானார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஜார்ஜ் பெர்னாண்டஸ் யாருக்கும் அஞ்சாதவர், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அச்சமற்ற, வெளிப்படையான மற்றும் தொலைநோக்குடன், அவர் நம் நாட்டிற்கு மதிப்புமிக்க பங்களிப்பை ஆற்றி உள்ளார்.  அவர் ஏழைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் பற்றி நாம் நினைவுகூரும்போது நீதிக்காகப் போராடிய ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும் அவரை நாம்  நினைவில் கொள்கிறோம். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களை அவரது மறைவு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என கூறியுள்ளார்.



இதேபோல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா சதுர்வேதி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #GeorgeFernandes #RIPGeorgeFernandes
Tags:    

Similar News