செய்திகள்

பனிப்பொழிவால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை ஐந்தாவது நாளாக முடங்கியது

Published On 2019-01-25 11:11 GMT   |   Update On 2019-01-25 12:02 GMT
காஷ்மீர் மாநிலத்தின் இருமுனைகளை இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை ஐந்தாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. #JammuSrinagarNH
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் தொடங்கி 40  நாட்கள்வரை உச்சகட்டமான பனிப்பொழிவு இருக்கும். இந்த ஆண்டின் அதிகபட்சப் பனிப்பொழிவு வரும் 31-ந் தேதிவரை நீடிக்கும். அதன் பின்னரும் அடுத்து 20 நாட்களுக்கு லேசான பனிப்பொழிவு இருக்கும்.

ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உறைபனி பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.

இதன் விளைவாக காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் பகுதியை மாநிலத்தின் பிறபகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் உள்ள ஜவஹர் சுரங்கப்பாலத்தை உறைபனி மூடியதால் கடந்த 5 நாட்களாக இப்பகுதி வழியாக போக்குவரத்து முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. இரு பகுதிகளின் வழியாக சரக்கு கொண்டு செல்ல வேண்டிய சுமார் 1500 லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு  வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் பகுதியில் நேற்றிரவு 1.3 செல்சியஸ் அளவுக்கு பனி பெய்தது. தெற்கு காஷ்மீர் பகுதியில் 1.2 செல்சியஸ் அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.

இந்நிலையில், கங்ரூ, ரம்சூ, பன்டியால், அனோக்கி, ரம்பான் ஆகிய மாவட்டங்கள்வழியாக செல்லும் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்றிரவில் இருந்து அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் இன்னும் சில நாட்களுக்கு இவ்வழியாக வாகனப் போக்குவரத்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. #JammuSrinagarNH 
Tags:    

Similar News