செய்திகள்

ஜாகிர் நாயக்கின் 16 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை உத்தரவு

Published On 2019-01-19 10:56 GMT   |   Update On 2019-01-19 10:56 GMT
தலைமறைவாக உள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. #ZakirNaik #ED
மும்பை:

வங்கதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரை கண்காணிக்கும்படி வங்கதேச அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது.
 
அதன்படி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.

தற்போது மலேசியாவில் உள்ள ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கருப்பு பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புடைய மும்பை மற்றும் புனேவில் உள்ள ஜாகிர் நாயக் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று உத்தரவிட்டது. #ZakirNaik #ED
Tags:    

Similar News