செய்திகள்

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து ஹர்த்திக் படேல் போட்டி?

Published On 2019-01-13 10:32 GMT   |   Update On 2019-01-13 10:32 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் ஹர்த்திக் படேல் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. #HardikPatel #Loksabhapolls #Varanasi
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த படேல் சமூக தலைவராக உருவெடுத்து இருக்கும் இளைஞர் ஹர்த்திக் படேல்.

இவர் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தி குஜராத்தையே ஸ்தம்பிக்க வைத்தார். இதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

இட ஒதுக்கீடு பிரச்சனையில் தொடர்ந்து பா.ஜனதாவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். குஜராத் சட்டசபை தேர்தலில் அவர் பிரசாரம் செய்யாவிட்டாலும் காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.


இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுயேட்சை வேட்பாளராக நிறுத்தி எதிர்க்கட்சிகள் ஆதரிக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஹர்த்திக் படேல் வாரணாசியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடனேயே அவர் மக்களை சந்திப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஹர்த்திக் படேலிடம் கேட்ட போது, “இப்போதைக்கு வாரணாசியில் போட்டியிடும் திட்டம் எதுவும் இல்லை” என்றார். ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ஹர்த்திக் படேல் தேர்தலில் போட்டியிடுவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் ஆதரவைப் பொறுத்து அவர் முடிவு எடுப்பார், ஹர்த்திக் படேல் வாரணாசியில் போட்டியிட்டால் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்படும் என்றனர். #HardikPatel #Loksabhapolls #Varanasi
Tags:    

Similar News