செய்திகள்

சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

Published On 2019-01-11 10:06 GMT   |   Update On 2019-01-11 10:06 GMT
தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தொடுத்த வழக்கை டெல்லி ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #CBI #RakeshAsthana
புதுடெல்லி:

ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ரூ.5 கோடி லஞ்சம் பெற்றார் எனக்கூறி உள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. அவரை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.



இதற்கிடையே, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, டெல்லி ஐகோர்ட்டில் தன் மீதான வழக்குக்கு எதிராக ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், கைது செய்வதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், தன்மீதான வழக்கை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கூறி இருந்தார். கைது செய்யப்பட்டுள்ள தேவேந்தர் குமார் தரப்பிலும், அவர் மீதான வழக்குக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்து வந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா மற்றும் தேவேந்திர குமார் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #CBI #RakeshAsthana
Tags:    

Similar News