செய்திகள்
ரெயிலை மறித்து மறியல் செய்த தொழிற்சங்கத்தினர்.

கேரளாவில் 2வது நாளாக ரெயில் மறியல் போராட்டம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2019-01-09 10:52 IST   |   Update On 2019-01-09 10:52:00 IST
கேரளாவில் இன்று 2-வது நாளாக ரெயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. #BharatBandh
திருவனந்தபுரம்:

நாடு தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு வரை நீடிக்கிறது.

கேரளாவிலும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோ, டாக்சி, வேன்களும் ஓடவில்லை. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதனால் ரெயில்களை பொதுமக்கள் நாடிச் சென்றனர். ஆனால் ரெயில்களையும் மறித்து போராட்டம் நடைபெற்றதால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் தாமதமாகவே புறப்பட்டுச் செல்ல முடிந்தது. இந்த போராட்டம் காரணமாக கேரள மாநிலமே ஸ்தம்பித்தது.

இன்று 2-வது நாளாக கேரளாவில் ரெயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். காலை 6 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடந்ததால் அந்த ரெயில் புறப்பட முடியாத சூழ்நிலை உருவானது. உடனடியாக ரெயில்வே போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு தாமதமாக ரெயில் புறப்பட்டுச் சென்றது.

இதேபோல கொச்சி, கொல்லத்திலும் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.



இன்றும் கேரள அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அனைத்து பஸ்களும் பாதுகாப்பாக டெப்போக்களில் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் சபரிமலைக்கு சென்று வந்தன.

திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்த நோயாளிகள் பலர் பஸ், ஆட்டோக்கள் இயங்காததால் சிரமத்திற்கு ஆளானார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தங்களது ஜீப், வேன்களில் அவர்களை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல உதவினார்கள்.

வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  #BharatBandh



Tags:    

Similar News