செய்திகள்
எரிமேலியில் உள்ள வாவர் மசூதி.

சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் வாவர் மசூதிக்கு வர தடை இல்லை- ஜமாத் நிர்வாகிகள் அறிவிப்பு

Published On 2019-01-09 04:39 GMT   |   Update On 2019-01-09 05:04 GMT
சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் வாவர் மசூதிக்கு வர தடை இல்லை என்று ஜமாத் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #Sabarimala #VavarMasjid
திருவனந்தபுரம்:

சபரிமலைக்கு செல்லும் வழியில் எரிமேலியில் பிரசித்திப் பெற்ற நயினார் மஸ்ஜித் உள்ளது. இதனை வாவர் மசூதி என்றும் அழைப்பார்கள்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வாவர் மசூதிக்கும் சென்று வழிபட்டுச் செல்வார்கள். சபரிமலையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பேட்டை துள்ளல் நடத்துபவர்களும் வாவர் மசூதிக்கு செல்வது வழக்கம்.

ஆண்டாண்டு காலமாக இந்த மசூதிக்கு ஆண்களும், பெண்களும் சென்று வழிபட்டு வருவது வழக்கம்.

சபரிமலையில் தற்போது இளம்பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 9 பேர் எரிமேலி வாவர் மசூதிக்கு செல்வதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று 6 பெண்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது மதக்கலவரம் மற்றும் கலகத்தை உருவாக்க முயற்சித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே எரிமேலி வாவர் மசூதியின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வாவர் மசூதியில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஆச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. வாவர் மசூதிக்கு வயது வித்தியாசமின்றி ஆண்களும், பெண்களும் வருகிறார்கள்.

இங்கு வரும் பெண்கள் உள்பட பக்தர்கள் மசூதியை வலம் வந்து பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்தி விட்டு சபரிமலைக்கு செல்கிறார்கள். பள்ளி வாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. நல்ல எண்ணத்துடன் இங்கு வர யாருக்கும் தடையில்லை.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #Sabarimala #VavarMasjid
Tags:    

Similar News