செய்திகள்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு வாபஸ் - அசாம் கனபரிஷத் அறிவிப்பு

Published On 2019-01-07 20:10 GMT   |   Update On 2019-01-07 20:10 GMT
அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அசாம் கனபரிஷத் கட்சி நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தது. #AsomGanaParishad #BJP #CitizenshipBill
கவுகாத்தி:

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவில் தங்கி உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பாரசீகர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் 6 ஆண்டுகள் தங்கினாலே இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதற்கு வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக அசாம் மாநிலத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை அசாம் கனபரிஷத் கட்சி பிரதிநிதிகள் சந்தித்து இந்த மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது என வலியுறுத்தினர். ஆனால் இதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. இதையடுத்து அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அசாம் கனபரிஷத் கட்சி நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பா.ஜ.க. 61 இடங்களிலும், அசாம் கனபரிஷத் கட்சி 14 இடங்களிலும், போடோலாண்ட் மக்கள் முன்னணி கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணிக்கு சுயேச்சை ஒருவரும் ஆதரவு தெரிவித்து உள்ளார். தற்போது அசாம் கனபரிஷத் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றாலும் பா.ஜனதா அரசுக்கு 74 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. #AsomGanaParishad #BJP #CitizenshipBill 
Tags:    

Similar News