செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - கரீம்நகர் தொகுதி வேட்பாளரை சந்திரசேகரராவ் அறிவித்தார்

Published On 2019-01-04 09:48 GMT   |   Update On 2019-01-04 09:48 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் கரீம்நகர் தொகுதியில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை முதல் மந்திரி சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். #ChandrashekarRao

ஐதராபாத்:

பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர் தொகுதியில் தற்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த வினோத்குமார் எம்.பி.யாக இருக்கிறார். அவர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று நேற்று சந்திரசேகரராவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கரீம்நகர் தொகுதிக்குட்பட்ட சர்சீலா நகரில் நடந்த கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசேகரராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது தெலுங்கானாவில் எம்.பி.க்களாக இருக்கும் டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தலில் கரீம்நகரில் மீண்டும் வேட்பாளராக வினோத்குமார் அறிவிக்கப்பட்டதும் டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினோத்குமாருக்கு டி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது. 43 சதவீதம் பேர் இந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து தெலுங்கானாவில் அனைத்து எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

சந்திரசேகரராவின் வேட்பாளர் அறிவிப்பு காரணமாக காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. #ChandrashekarRao

Tags:    

Similar News