செய்திகள்

மக்களவையில் தொடர் அமளி- மேலும் 7 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்

Published On 2019-01-03 07:04 GMT   |   Update On 2019-01-03 07:52 GMT
மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவை சேர்ந்த மேலும் 7 எம்பிக்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்துள்ளார். #WinterSession #ADMKMPsProtest
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிக்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேர் 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

இதையடுத்து அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர்கள் 7 பேரும் மக்களவையில் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்குள் கூட்டத் தொடரும் முடிவடைந்துவிடும். எனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்பிக்கள் அனைவரும் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. #WinterSession #ADMKMPsProtest
Tags:    

Similar News