செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்துக்கு மத்திய மந்திரிகள் கண்டனம்

Published On 2018-12-24 01:33 GMT   |   Update On 2018-12-24 01:33 GMT
நரேந்திர மோடி அரசு பற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கருத்துக்கு, மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ImranKhan #PMModi
புதுடெல்லி:

இந்தி நடிகர் நஸ்ருதீன்ஷா, இந்தியாவில் இப்போது மதரீதியான வெறுப்பு அதிகரித்துவருகிறது. போலீஸ்காரரின் உயிரைவிட பசுக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், “நரேந்திர மோடி அரசு மதரீதியான சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது என்பதை இது காட்டுகிறது” என்று கூறியிருந்தார்.

இம்ரான்கானின் இந்த கருத்துக்கு மத்திய மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-

1947-ம் ஆண்டு பாகிஸ்தான் உருவானதில் இருந்து அங்குள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற பல சிறுபான்மையினர் 90 சதவீதம் குறைந்துவிட்டனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் 2 அல்லது 3 சதவீதம் தான் உள்ளனர்.

சிறுபான்மையினர் கொல்லப்படுவது, மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்துவது, துன்புறுத்தப்படுவது என பாகிஸ்தான் போலன்றி, இந்தியாவில் அவர்கள் வளர்ந்து, நாட்டின் வளர்ச்சியில் சமமான பங்குதாரர்களாக உள்ளனர். நடிகர்கள் யூசுப்கான் என்கிற அனைவராலும் அறியப்படும் திலீப்குமார், அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் பல தலைமுறைகளாக இந்தியர்களால் போற்றப்படுகிறார்கள்.



இவர்களைப்போல பாகிஸ்தானில் சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து வந்த ஒரு நடிகரின் பெயரையாவது இம்ரான்கானால் கூறமுடியுமா? சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் நடைபெறும் நிலம் பாகிஸ்தான். பல தலைமுறைகளாக சிறுபான்மையினரின் ரத்தம் அந்த நிலம் முழுவதும் சிந்தப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய அவர்களின் அறிவுரை, 100 எலிகளை தின்ற பூனை ஆன்மிக யாத்திரை சென்றது போல் உள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினரின் அரசியல்சாசன, சமூக, ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாப்பானதாகவே உள்ளது.

இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

அவர் மேலும், இதுபோன்ற பொதுவான கருத்து தெரிவிக்கும்போது அது பல தீமைகளையும், நமது நாட்டை இலக்காக கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்பதை நடிகர் நஸ்ருதீன்ஷா கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறும்போது, “இப்போது பாகிஸ்தான் போன்ற ஒரு பயங்கரவாத நாடு சிறுபான்மையினரை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு பாடம் நடத்துகிறது. பாகிஸ்தானில் 23 சதவீதமாக இருந்த இந்துக்கள் இப்போது 2 சதவீதமாக குறைந்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொருவரும் அவர்கள் விருப்பத்துக்கேற்ப வளர்ந்து வருகிறார்கள்” என்றார்.

வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவேஷ் குமார் கூறும்போது, “அவர்கள் தங்கள் வேலையை மட்டும் கவனித்தால் நல்லது என நான் கருதுகிறேன். அவர்களது உள்நாட்டு பிரச்சினைகளே இப்போது மிகவும் குழப்பத்தில் உள்ளது” என்றார். #ImranKhan #PMModi
Tags:    

Similar News