செய்திகள்

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் நாளை தீர்ப்பு

Published On 2018-12-20 10:32 GMT   |   Update On 2018-12-20 10:32 GMT
மும்பை சி.பி.ஐ. நீதிபதிமன்றத்தில் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது. #SohrabuddinEncountercase
மும்பை:

குஜராத் மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி சவுசர்பி ஆகியோர் போலீஸ்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் என்று கூறி அவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த என்கவுண்டர் போலியாக நடத்தப்பட்டது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த நிலையில் சொராபுதீன் ஷேக்கின் உதவியாளர் துளசி பிரஜாபதியும் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவும் போலியாக நடந்த என்கவுண்டர் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இந்த கவுண்டர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த போலி என்கவுண்டரில் குஜராத் மாநில அரசில் உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.


இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு அமித்ஷா கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த என்கவுண்டர் வழக்கு விசாரணை மும்பை சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டில் நடந்தது.

சுமார் 500 பேர் சாட்சிகளாக பட்டியலிடப்பட்டனர். ஆனால் 210 பேர் மட்டுமே சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

அந்த குற்றப்பத்திரிகையில் அமித்ஷா மற்றும் ராஜஸ்தான் உள்துறை மந்திரியாக இருந்த குலாப்சந்த் கட்டாரியா பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அமித்ஷா, கட்டாரியா உள்பட 16 பேரை இந்த வழக்கில் இருந்து சி.பி.ஐ. கோர்ட்டு விடுவித்தது.

மீதமுள்ள 22 பேர் மீதும் விசாரணை நடந்தது. சமீபத்தில் வக்கீல்கள் வாதம் முடிந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்த போலி என்கவுண்டர்கள் வழக்கில் நாளை (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பை அறிவிப்பார்.

இதற்கிடையே சாட்சிகள் விசாரணை முழுமையாக நடக்கவில்லை என்ற பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளன. #SohrabuddinEncountercase
Tags:    

Similar News