செய்திகள்

சபரிமலையில் 144 தடை மீண்டும் நீடிப்பு

Published On 2018-12-18 05:22 GMT   |   Update On 2018-12-18 05:22 GMT
சபரிமலையில 144 தடை உத்தரவு இன்று ஒருநாள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. #Sabarimala
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்றான மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் ஐயப்ப பக்தர்கள் வருகையும் பாதியாக குறைந்தது.

மேலும் சபரிமலையில 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த தடை உத்தரவு இன்று ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நிலவும் போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஐயப்ப பக்தர்கள் வருகை சற்று அதிகரித்து உள்ளது.

நேற்று ஒரேநாளில் 83 ஆயிரத்து 648 பக்தர்கள் சபரிமலை வருகை தந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்தனர்.

கடந்த ஆண்டு ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகை தந்தனர். அவர்கள் 10 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த பிறகுதான் சாமி தரிசனம் செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.

வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலையில் கடந்த ஆண்டு மொத்தம் ரூ.356 கோடியே 60 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. இதே நாளில் ரூ.123 கோடியே 93 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை ரூ.72 கோடியே 2 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு காணிக்கை மூலம் மட்டும் ரூ.100 கோடி வருமானம் வந்திருந்தது. இது இந்த ஆண்டு ரூ.28 கோடியே 13 லட்சமாக குறைந்துள்ளது. சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை மற்றும் அப்பம் பிரசாதம் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது.

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப தர்ம சேனை தலைவர் ராகுல் ஈஸ்வர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறை நடைபெற்றதால் ராகுல் ஈஸ்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பத்தினம் திட்டா போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர், கடந்த சனிக்கிழமை போலீஸ் நிலையத்தில் கையெழுந்து இடவில்லை. இதை தொடர்ந்து அவரது ஜாமீனை ரத்து செய்த கோர்ட்டு அவரை கைது செய்யவும், போலீசுக்கு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து பாலக்காட்டில் வைத்து ராகுல் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர்.  #Sabarimala
Tags:    

Similar News