செய்திகள்

குஜராத்தில் கோர்ட்டில் புகுந்து சிறுத்தைப்புலி ரகளை

Published On 2018-12-15 05:44 GMT   |   Update On 2018-12-15 05:44 GMT
குஜராத்தில் கோர்ட்டில் சிறுத்தைப்புலி புகுந்ததால் இதை பார்த்த பொதுமக்களும், கோர்ட்டு ஊழியர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

அகமதாபாத்:

குஜராத்தின் சுரேந்தர் நகர் மாவட்டம் சோட்டிலா நகரில் கோர்ட்டு உள்ளது. நேற்று கோர்ட்டு அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

இதை பார்த்த பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுத்தைப்புலியை பிடிக்க முயன்றபோது அது கோர்ட்டு வளாகத்துக்குள் புகுந்தது. அங்கும் இங்கும் ஓடியது. இதை பார்த்த பொதுமக்களும், கோர்ட்டு ஊழியர்களும் அலறியடித்து ஓடினார்கள்.

சிறுத்தை கோர்ட்டில் உள்ள ஒரு அறைக்குள் புகுந்து கொண்டது. அங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர்.

அவர்கள் சிறுத்தையை பார்த்ததும் வெளியே ஓடி வந்து கதவை பூட்டி விட்டனர். 2 ஊழியர்கள் மட்டும் அங்கிருந்த மற்றொரு அறையில் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர்.

உடனே வனத்துறை அதிகாரிகள் அந்த அறையின் ஜன்னலை உடைத்து 2 பேரையும் மீட்டனர்.

அதன்பின் வனத்துறை அதிகாரிகள் கோர்ட்டு அறைக்குள் மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தி சிறுத்தையை பிடித்தனர்.

Tags:    

Similar News