செய்திகள்

சசிகலாவிடம் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

Published On 2018-12-14 06:18 GMT   |   Update On 2018-12-14 06:18 GMT
பெங்களூரு சிறையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். #ITRaids #Sasikala
பெங்களூரு:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.



சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவர்கள் உறவினர்கள் டி.டி.வி. தினகரன், விவேக் மற்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடந்தது. மொத்தம் 187 இடங்களில் நடந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை உதவி கமி‌ஷனர் வீரராகவன் தலைமையில் உள்ள குழுவினர் இந்த விசாரணையை நடத்தினார்கள். இந்த விசாரணை குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகளும், 2 உதவியாளர்களும் இடம்பெற்று இருந்தனர்.

நேற்று காலை 10.50 மணிக்கு 9 பேர் கொண்ட குழுவினரும் சிறை வளாகத்துக்கு காரில் சென்றனர். அவர்கள் சென்ற கார் சிறை கேட் வரை அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து 5 பைகள் மற்றும் சூட்கேஸ்களில் வைக்கப்பட்டு இருந்த ஆவணங்களை எடுத்து சென்று சசிகலாவிடம் காட்டி விசாரணை நடத்தினார்கள். 11.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது.

அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பெரும்பாலும் தெரியாது, ஞாபகம் இல்லை என்று அவர் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

சசிகலா பங்குதாரராக இருந்த நிறுவனங்கள், அவரது உறவினர்கள் தொடர்பான சொத்துக்கள், வங்கி பண இருப்பு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு ஓட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவில் இடம்பெற்ற ஒரு அதிகாரிக்கு பெங்களூருவிலேயே வீடு இருப்பதால் அவர் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட உணவை சாப்பிட்டார்.

சசிகலாவுக்கு சாப்பிடுவதற்காக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டது. அவர் சாப்பிட்டுவிட்டு வந்தபிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இந்த விசாரணை விவரங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளும் அதற்கு சசிகலா அளித்த பதில்களும் சம்பவ இடத்திலேயே டைப் செய்யப்பட்டு அந்த பேப்பரை காட்டி சசிகலாவிடம் அதிகாரிகள் கையெழுத்து பெற்றனர்.

விசாரணை நடப்பதற்கு முன்பும், விசாரணை முடிந்த பிறகும் சிறையில் உள்ள மருத்துவர்கள் சசிகலாவுக்கு ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில்  இன்று 2-வது நாளாக சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் மாலை வரை விசாரணை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்க உள்ளனர். #ITRaids #Sasikala
Tags:    

Similar News