செய்திகள்

பாஜகவுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்க 5 மாநில தேர்தல் முடிவுகள் உதவும்- சந்திரபாபு நாயுடு

Published On 2018-12-11 10:45 GMT   |   Update On 2018-12-11 10:45 GMT
பாஜகவுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்குவதற்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் உதவியாக இருக்கும் என ஆந்திர முதல்வரும் தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். #Results2018 #TelanganaElections #ChandrababuNaidu
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்  வெளியாகி வருகின்றன. ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மெஜாட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இதேபோல் அக்கட்சியின் முன்னணி வேட்பாளர்கள் பலரும் வெற்றியை நெருங்கி உள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானாவில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் சந்திரசேகர ராவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


“தெலுங்கானா தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தெலுங்குதேசம் கட்சி மதிக்கிறது. வெற்றி பெற்ற சந்திரசேகர ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 5 மாநிலங்களிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எதுவும் செய்யாததால் மக்கள் மாற்றத்தை நோக்கி நகர்கின்றனர். பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்குவற்கு 5 மாநில தேர்தல் முடிவுகள் உதவியாக இருக்கும்’ என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் இன்று பிற்பகல் நிலவரப்படி தெலுங்குதேசம் கட்சி-காங்கிரஸ் கூட்டணி  20 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. #Results2018 #TelanganaElections #ChandrababuNaidu
Tags:    

Similar News