செய்திகள்

5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை

Published On 2018-12-11 03:19 GMT   |   Update On 2018-12-11 03:19 GMT
ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. #Results2018 #CongressLeading
ஜெய்ப்பூர்:

தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலங்களிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கி உள்ளன.



வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளியான தகவலின்படி காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

இதேபோல் ராஜஸ்தானில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. காலை நிலவரப்படி பாஜக 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 14 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12  தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 4 இடத்திலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. இந்த முன்னிலை நிலவரத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மதியம் 12 மணியளவில் உள்ள முன்னிலை நிலவரத்தைப் பொருத்து வெற்றி தோல்வியை கணிக்க முடியும். #Results2018 #CongressLeading
Tags:    

Similar News