செய்திகள்

புலந்த்சாகர் வன்முறை - உயிரிழந்த இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு யோகி ஆதித்யநாத் ஆறுதல்

Published On 2018-12-06 06:25 GMT   |   Update On 2018-12-06 06:25 GMT
உ.பி. வன்முறையின்போது போராட்டக்காரர்களால் படுகொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறினார். #BulandshahrViolence #YogiAdityanath
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகில் பசுக்கள் இறந்து கிடந்ததால், அங்கு பசுவதைக் கூடம் செயல்படுவதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் மீது போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.

இந்த வன்முறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் சிங் கொல்லப்பட்டார். அவர் மீது போராட்டக் கும்பல் கற்களை வீசி தாக்கியதும், துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்து. வன்முறை தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



இந்நிலையில், புலந்த்சாகர் வன்முறையில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் சிங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர், அவர்களின் குடும்பத்திற்கு அரசு தேவையான உதவிகளை செய்வதாகவும், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் உறுதி அளித்தார். முதல்வருடன் டிஜிபி ஓபி சிங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

புலந்த்சாகர் வன்முறையின்போது இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக டிஜிபி ஓபி சிங் தெரிவித்தார். #BulandshahrViolence #YogiAdityanath

Tags:    

Similar News