செய்திகள்

சபரிமலை கோவில் வருமானம் ரூ.31 கோடி குறைந்தது

Published On 2018-12-03 04:58 GMT   |   Update On 2018-12-03 04:58 GMT
சபரிமலை கோவில் நடை திறந்த 13 நாளில் ரூ.19 கோடியே 37 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.31 கோடி குறைவு. #Sabarimala
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் பிரசித்திபெற்ற ஆன்மீக தலமாக திகழ்கிறது.

இங்கு நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை போன்றவை மிகவும் சிறப்பு பெற்றது. இதுபோல ஒவ்வொரு மாதமும் கோவில் நடை திறந்து சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும்.

இதனால் சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் அங்கு அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தலையில் இருமுடி கட்டு சுமந்து சாமியே சரணம் அய்யப்பா என்ற கோ‌ஷத்துடன் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

சபரிமலையில் இளம்பெண்களை தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் வரலாறு காணாத வகையில் சபரிமலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் கெடுபிடி மற்றும் போராட்டங்கள் காரணமாக சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துவிட்டது.

பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானமும் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு மண்டல பூஜை தொடங்கிய 13 நாளில் ரூ.50 கோடியே 58 லட்சம் மொத்த வருமானம் கிடைத்திருந்தது.

இந்த ஆண்டு 13 நாளில் ரூ.19 கோடியே 37 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. ரூ.31 கோடி வருமானம் குறைந்துள்ளது.

சபரிமலை கோவிலில் உண்டியல் மூலம் கடந்த ஆண்டு இதே நாளில் ரூ.17 கோடி கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.9 கோடியாக குறைந்துவிட்டது. அதே போல சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை, அப்பம் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு பிரசாதங்கள் ரூ.7 கோடிக்குதான் விற்பனையாகி உள்ளது. #Sabarimala
Tags:    

Similar News