செய்திகள்

சர்க்கசில் அனைத்து மிருகங்களுக்கும் தடை- மத்திய அரசு ஆலோசனை

Published On 2018-11-30 10:01 IST   |   Update On 2018-11-30 10:01:00 IST
சர்க்கசில் நாய், குதிரை, யானை போன்ற மிருகங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. #Circus #CentralGovt
புதுடெல்லி:

சர்க்கஸ் என்றாலே மிருகங்களும், கோமாளிகளும், சாகசங்களும் நினைவுக்கு வரும். குழந்தைகள் ரசித்து மகிழ்வார்கள்.

காட்டுக்கு சென்று பார்க்க முடியாத சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய மிருகங்களை கூண்டில் அடைத்து நம் கண்முன் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மிருகங்களை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்யக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் மிருகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் நாய், யானை, குதிரை போன்ற மிருகங்களை வைத்தும் கிளிகளை வைத்தும் வேடிக்கை காட்டி வந்தனர். இப்போதும் அதற்கும் தடை வருகிறது. இது தொடர்பாக மிருக பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு ஏற்கனவே அனைத்து வகையான மிருகங்களையும் சர்க்கசில் காட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்காக மத்திய அரசு புதிதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் மிருகங்களை காட்சி பொருளாகவோ, சித்ரவதை செய்து துன்புறுத்துவதை தடை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

.
இதை சர்க்கசில் அமல்படுத்த வேண்டும் என்று வனவிலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து சர்க்கசில் நாய், குதிரை, யானை போன்ற மிருகங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

ஏற்கனவே சிங்கம், புலி, கரடி தடை செய்யப்பட்டதாலும், டி.வி., செல்போன், இணைய தளம் வருகையாலும் சர்க்கசுக்கு மவுசு குறைந்தது. இப்போது எஞ்சியுள்ள மிருகங்களையும் தடை செய்தால் சர்க்கஸ் தொழில் அடியோடு பாதிக்கும் என்று சர்க்கஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் தான் சர்க்கஸ் ஊழியர்கள் அதிகம் உள்ளனர். ஏற்கனவே சினிமா போன்ற தொழிலுக்கு அவர்கள் வாய்ப்பு தேடிச் சென்று விட்டனர். சர்க்கசும் முன்பு போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Circus #CentralGovt
Tags:    

Similar News