செய்திகள்

காவிரியில் கழிவுகள் கலப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-11-17 18:46 GMT   |   Update On 2018-11-17 18:46 GMT
தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. #CauveryWater #Waste #SupremeCourt
புதுடெல்லி:

கர்நாடகாவில் காவிரி கரையோரம் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளில் உற்பத்தியாகும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கின்றன. இதனால் ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

இதனால் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் காவிரி கரையோரம் வாழும் தமிழக மக்களும், கால்நடைகளும் பலவித நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.

எனவே காவிரியில் கலக்கும் இத்தகைய கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விடும் வகையில் நடவடிக்கை எடுக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கழிவுகள் கலப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை 16-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இதில், கர்நாடகாவில் காவிரி உற்பத்தியாகும் இடம் மற்றும் அங்கு பாயும் பகுதிகளில் எங்கும் கழிவு நீர் கலக்கப்படவில்லை எனவும், தென்பெண்ணையாறு, அர்க்காவதி ஆகிய கிளை நதிகள்தான் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பிரவேசிக்கின்றன என்றும் கூறப்பட்டது.

இந்த அறிக்கை மீது ஏற்கனவே தமிழக அரசும், கர்நாடக அரசும் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும், இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர். 
Tags:    

Similar News