செய்திகள்

முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் - ஜம்முவில் 79.5 சதவீதம், காஷ்மீரில் 64.5 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2018-11-17 21:08 IST   |   Update On 2018-11-17 21:08:00 IST
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் ஜம்முவில் 79.5 சதவீதமும், காஷ்மீரில் 64.5 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Kashmirpanchayatelection
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 
 
இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் இன்று தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு மக்களை வலியுறுத்தி வந்தனர்.

காஷ்மீர் மற்றும் ஜம்மு வட்டாரங்களில் ஏற்கனவே 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1676 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 420 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1845 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 5585 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காஷ்மீர் பகுதியில் 1303 வாக்குச்சாவடிகள், ஜம்முவில் 1993 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

அதன்படி, ஜம்மு பகுதியில் 79.5 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 64.5 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #Kashmirpanchayatelection
Tags:    

Similar News