செய்திகள்

ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு

Published On 2018-11-16 18:02 GMT   |   Update On 2018-11-16 18:02 GMT
ஆந்திராவில் சிபிஐ தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு வழங்கிய அனுமதியை சந்திரபாபு நாயுடு அரசு திரும்ப பெற்றது. #ChandrababuNaidu #CBI

ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்தஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது. சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் ஆந்திராவில் சிபிஐயின் அதிகாரத்தை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா நவம்பர் 8-ம் தேதி பிறப்பித்துள்ளார்.

இது, நேற்று இரவு வெளியே தெரியவந்துள்ளது. டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டத்தின் பிரிவு 6-ன் படி மாநில அரசு ஒப்புதலை திரும்ப பெறலாம். அதன்படியே மாநில அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அனுமதி வழங்கிய மூன்று மாதங்களில் ஆந்திர மாநில அரசிடம் இருந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிபிஐக்கு அனுமதி வழங்கும் வகையில் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆந்திரா அரசு உத்தரவை வெளியிட்டு இருந்தது. இதற்கிடையே மாநில விசாரணைப்பிரிவின் அதிகார வரம்பை விஸ்தரிக்க ஆந்திரா அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நடவடிக்கையை ஆதரித்துள்ள ஆந்திர பிரதேச மாநில துணை முதல்வர் சின்ன ராஜப்பா, சிபிஐக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். “எங்களுக்கு சிபிஐயின் மீது நம்பிக்கையுள்ளது. ஆனால் சிபிஐயின் தலைமை அதிகாரிகளுக்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டுக்கள் எங்களுடைய ஒப்புதலை திரும்ப பெற செய்யும் கட்டாயத்திற்கு தள்ளியது. சிபிஐ ஒவ்வொரு வழக்கிற்கும் அனுமதியைப் பெற வேண்டும்,” என கூறியுள்ளார். வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடனான ஆலோசனையை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக அரசும் அனுமதியை திரும்ப பெற்றுள்ளது என்று கூறியுள்ள ராஜப்பா, மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு எந்தஒரு தடையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.



“எங்களுக்கு எப்போது எல்லாம் விசாரணை தொடர்பாக சிபிஐ கோரிக்கை விடுக்கிறதோ அப்போது எல்லாம் தேவையான அனுமதியை வழங்குவோம்,” எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே சிபிஐயை தடை செய்வதன் உள்நோக்கம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கையை மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். சிபிஐயை ஆந்திராவிற்கு பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என சந்திரபாபு நாயுடு சரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பா.ஜனதாவால் நோட் ஜேஞ்சராக வேண்டுமென்றால் இருக்கலாம், கேம் ஜேஞ்சராக இருக்க முடியாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #ChandrababuNaidu #CBI
Tags:    

Similar News