செய்திகள்

சந்திரசேகரராவுக்கு ரூ.22 கோடி சொத்து, ஆனால் சொந்த கார் கூட இல்லை

Published On 2018-11-15 10:27 GMT   |   Update On 2018-11-15 10:27 GMT
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ரூ.22 கோடி சொத்து உள்ளதாக தனது வேட்புமனு தாக்கலில் தெரிவித்து உள்ளார். #ChandrasekharRao
நகரி:

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது.

இதில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது.

முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கெஜ்லால் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் சந்திரசேகரராவ் தனது சொத்து கணக்குகளை தெரிவித்து உள்ளார்.

அவருக்கு ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தான் விவசாய தொழில் செய்து வருவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.31.5 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய தொழிலில் ரூ.3.2 கோடியை முதலீடு செய்து உள்ளதாகவும், பண்ணை வீடுகள் மதிப்பு ரூ.6.5 கோடி என்றும் தெரிவித்துள்ளார். ரொக்கமாக ரூ.1.3 கோடி இருப்பதாக கூறி உள்ளார்.

மேலும் அவர் தனியார் கம்பெனிகளிலும் முதலீடு செய்துள்ளார்.

சந்திரசேகரராவ் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது கட்சியின் சின்னம் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சந்திரசேகரராவுக்கு சொந்தமாக கார் இல்லை என்பது சுவாரசியமாக பார்க்கப்படுகிறது.

அவரிடம் கார் இல்லாமல் இருந்தாலும் அவரது பாதுகாப்புக்காக அரசு சார்பில் சொகுசு கார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சந்திரசேகரராவ் ரூ.2.4 லட்சத்துக்கு நகைகள் வைத்துள்ளார். அவரது மனைவிக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் நகை இருக்கிறது. அவரது மகன் கே.டி.ராமராவ் ரூ.84 லட்சமும், மருமகள் ‌ஷலிமா ரூ.24 லட்சமும் ரொக்கம் வைத்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்த சந்திரசேகர ராவ் ரூ.15 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது 4 வருடத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.7 கோடி உயர்ந்துள்ளது.

இதேபோல் 2014-ம் ஆண்டு 37 ஏக்கர் நிலம் இருந்ததாக தெரிவித்து இருந்தார். தற்போது 54 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார். #ChandrasekharRao
Tags:    

Similar News