செய்திகள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு தற்கொலை தாக்குதல் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2018-11-09 02:54 GMT   |   Update On 2018-11-09 02:54 GMT
பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பல லட்சம் பேரின் வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #Demonetisation #Congress #RahulGandhi
புதுடெல்லி:

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்தியா எத்தனையோ சோகங்களை கண்டுள்ளது. அவையெல்லாம் வெளிநாட்டு எதிரிகள் நமக்கு இழைத்தவை. ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தனித்துவம் வாய்ந்தது.



அது, நமக்கு நாமே தேடிக்கொண்ட சோகம். பல லட்சம் பேரின் வாழ்க்கையையும், ஆயிரக்கணக்கான சிறு தொழில்களையும் அழித்த தற்கொலை தாக்குதல்.

அந்த நடவடிக்கை, மோசமாக வகுக்கப்பட்டு, தவறாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கை. ஆனால், நன்கு திட்டமிடப்பட்ட குற்றவியல் பொருளாதார ஊழல் ஆகும்.

இதுதொடர்பான முழு உண்மைகள் இன்னும் வெளியாகவில்லை. அது வெளியாகும்வரை இந்திய மக்கள் ஓய மாட்டார்கள். அரசு எவ்வளவுதான் மறைத்தாலும் நாடு கண்டுபிடிக்கும். தகுதியற்ற நிதி மந்திரி உள்ளிட்டவர்கள், இந்த குற்றவியல் கொள்கைக்கு முட்டுக்கொடுக்கும் வேலையில் இறங்கி உள்ளனர்.

பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. வெறும் பேரழிவாகவே முடிந்து விட்டதாக உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நாள், ஒரு மோசமான நாளாக இந்திய வரலாற்றில் எப்போதும் நினைவில் நிற்கும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். #Demonetisation #Congress #RahulGandhi
Tags:    

Similar News