செய்திகள்
சரிதாநாயர், உம்மன்சாண்டி, வேணுகோபால்.

விருந்தினர் மாளிகையில் உம்மன் சாண்டி உடல் ரீதியாக தொல்லை கொடுத்தார் - சரிதாநாயர் புகாரில் தகவல்

Published On 2018-10-25 06:43 GMT   |   Update On 2018-10-25 06:43 GMT
சோலார் பேனல் அமைக்க அனுமதி கேட்டு அணுகியபோது விருந்தினர் மாளிகையில் உம்மன் சாண்டி உடல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று சரிதாநாயர் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். #SarithaNair #OommenChandy
திருவனந்தபுரம்:

கேரளாவைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர்.

கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது சோலார் பேனல் அமைத்து தரும் நிறுவனத்தை சரிதாநாயர் தொடங்கினார். இதற்காக பலரிடமும் பணம் வசூலித்தார்.

இதில், ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினர். பணம் வாங்கிய பின்பு சரிதாநாயர் கூறியபடி, சோலார் பேனல் அமைக்கவில்லை. இதுபற்றி பணம் கொடுத்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதில், சரிதாநாயர் தங்களிடம் பணம் பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறி இருந்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரிதா நாயரை கைது செய்தனர்.

கைதான சரிதாநாயர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அவரது மந்திரிசபையில் இடம் பெற்றவர்கள், அரசியல் பிரமுகர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறினார்.

அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நீதிபதி சிவராஜன் தலைமையில் கமி‌ஷன் அமைக்கப்பட்டது.

கமி‌ஷன் விசாரணை நடந்து வந்த நிலையில் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்தது. அவர்கள் முன்பு விசாரணை கமி‌ஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சரிதாநாயருக்கு அரசியல் பிரமுகர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உம்மன்சாண்டி மற்றும் காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்தனர்.



கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரச்சினை தீவிரமாக இருந்த போது, திடீரென உம்மன்சாண்டி, வேணுகோபால் ஆகியோர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சபரிமலை பிரச்சினையை திசை திருப்ப அரசு நாடகமாடுவதாகவும், தங்கள் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு சட்ட ரீதியாக பதில் அளிப்போம் என்றும் உம்மன்சாண்டி, வேணுகோபால் ஆகியோர் தெரிவித்தனர்.

உம்மன்சாண்டி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா பதில் அளித்தார். அதில், சரிதாநாயர் சமீபத்தில் புதிய புகார் ஒன்றை அளித்தார். அதன் பேரிலேயே இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

இந்நிலையில் சரிதாநாயர் போலீசில் அளித்த புகார் விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சோலார் பேனல் நிறுவனத்திற்கு அனுமதி கேட்டு அரசை அணுகினேன். இதற்காக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் என்னை அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டியிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அதன் பிறகு உம்மன்சாண்டி அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

சோலார் பேனல் அமைக்க தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறினார். மேலும் என்னை கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருமாறு அழைத்தார். அவரை பார்க்க நானும் அங்கு சென்றேன். அப்போது அவர், என்னை உடல் ரீதியாக தொந்தரவு செய்தார்.

சோலார் பேனல் விவகாரத்தில் உம்மன் சாண்டி எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல தொந்தரவுகள் கொடுத்தார். இதுபோல வேணுகோபால் எம்.பி. ஆலப்புழாவில் உள்ள ரோஸ் ஹவுஸ் மாளிகையில் என்னை சந்தித்தார். அவரிடம் என்னை காங்கிரஸ் மந்திரி அணில்குமார் அழைத்துச் சென்றார்.

ரோஸ் ஹவுசில் வேணுகோபால் எம்.பி. என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இவர்களால் நான் பலமுறை பாதிக்கப்பட்டேன்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி உள்ளார்.

சரிதாநாயர் புகாரில் தெரிவித்துள்ள சம்பவங்கள் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சம்பவம் நடந்த விருந்தினர் மாளிகை, ரோஸ் ஹவுசுக்கு சென்று சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.  #SarithaNair #OommenChandy



Tags:    

Similar News