செய்திகள்

சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டை - 3 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்

Published On 2018-10-20 10:46 GMT   |   Update On 2018-10-20 10:46 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Naxalsgunneddown #ChhattisgarhNaxals
ராய்பூர்:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

அவ்வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு விரைவில் நடைபெறும் தேர்தலை சீர்குலைப்பதற்காகவும், வன்முறை தாக்குதல்களை நடத்துவதற்காவும் பிஜப்பூர் மாவட்டம், மடப்பல் கிராமம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருவதாக சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, தலைநகர் ரார்ப்பூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அந்த காட்டுப் பகுதிக்கு சிறப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இன்று காலை சுமார் 9 மணியளவில் காட்டுப்பகுதிக்குள் பதுங்கியிருந்த நக்சலைட்கள் சிறப்பு படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து, கைத்துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் மற்றும் நக்சலைட் இயக்கம் தொடர்பான சில புத்தகங்கள் ஆகியவற்றை சிறப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.  #Naxalsgunneddown #ChhattisgarhNaxals
Tags:    

Similar News