செய்திகள்

சந்திரபாபு நாயுடுவை கண்டித்து பவன் கல்யாண் பேரணி- 1 லட்சம் பேர் திரண்டனர்

Published On 2018-10-19 06:50 GMT   |   Update On 2018-10-19 06:50 GMT
சந்திரபாபு நாயுடுவை கண்டித்தும், தனது கட்சியை பலப்படுத்துவதற்காகவும் பவன் கல்யாண் நடத்திய பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் பேரணியில் திரண்டனர். #PawanKalyan #ChandrababuNaidu
நகரி:

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், ஜனசேனை கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்தார்.

சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற அவர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து ஆந்திராவில் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். 2019-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகவும், தனது கட்சியை பலப்படுத்துவதற்காகவும் பேரணி நடத்த முடிவு செய்தார். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே தபலேஸ்வரம் பாலம் அருகே இந்த பேரணி நடந்தது. இதில் பங்கேற்க தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது அழைப்பை ஏற்று 1 லட்சம் தொண்டர்கள் பேரணியில் குவிந்தனர்.

பேரணியில் பவன் கல்யாண் நடந்து செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அதிக அளவில் தொண்டர்கள் குவிந்திருந்ததால் நெரிசல் ஏற்படும் என்று கருதி அவரை போலீசார் நடந்து செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து பேரணியின் போது பவன்கல்யாண் காரில் சென்றார். தொண்டர்கள் அவரது காரை பின் தொடர்ந்து பேரணியாக சென்றனர்.

பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் பேசியதாவது:-

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது. இதுபற்றி கேள்வி எழுப்பினால் சந்திரபாபு நாயுடு வாய் திறப்பதில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஒரு வார்டில் கூட போட்டியிடாத அவரது மகனை எம்.எல்.சி. ஆக்கி உள்ளாட்சித் துறை மந்திரியாக்கி விட்டார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்றார். ஆனால் அவரது மகனுக்கு மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார்.

தேர்தலின் போது 600 வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எதையும் அமல்படுத்தவில்லை. 6 வயது குழந்தையை கேட்டால் கூட சந்திரபாபு நாயுடு அரசின் ஊழலை எடுத்துச் சொல்கிறது. நலத்திட்டங்கள் எல்லாம் ஆளும் கட்சியினருக்கு மட்டுமே கிடைக்கிறது. மக்களுக்கு கிடைக்கவில்லை.

ஜெகன்மோகன் ரெட்டி மீது எனக்கு கோபம் இல்லை. அவரது தந்தை ராஜசேகர ரெட்டி மீது தான் எனக்கு கோபம் உண்டு. 2007-ம் ஆண்டு அவர் முதல்-மந்திரியாக இருந்த போது அவரது கட்சியினர் என்னை வைத்து படம் எடுக்க முயன்றனர். அதற்கு நான் மறுத்தேன். எனவே என்னை மிரட்டினார்கள். அதனால்தான் ராஜசேகர ரெட்டி மீது எனக்கு கோபம் வந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

பவன் கல்யாண் நேற்று ஆந்திரா மாநிலம் ஸ்ரீகா குளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.  #PawanKalyan #ChandrababuNaidu
Tags:    

Similar News