செய்திகள்

வடக்கு ஒடிசா- மேற்குவங்காளத்தை டிட்லி புயல் மீண்டும் தாக்கியது

Published On 2018-10-12 05:08 GMT   |   Update On 2018-10-12 05:08 GMT
ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை தாக்கிய டிட்லி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மீண்டும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது. #TitliCyclone
புதுடெல்லி:

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான டிட்லி புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது.

நேற்று அதிகாலை வடக்கு ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களையும் தெற்கு ஒடிசாவின் கஜபதி மற்றும் கஞ்சம் மாவட்டங்களையும் பலமாக தாக்கியது. அப்போது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. காற்றும் மழையும் 4 மாவட்டங்களையும் துவம்சம் செய்தது.

அதன்பிறகு அதி தீவிர புயலாக இருந்த டிட்லி புயல், தீவிர புயலாக மாறி தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி சுழன்று நகர்கிறது.

நேற்று இரவு வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கேங்டிக் பகுதியை டிட்லி புயல் தாக்கியது. தற்போது வடக்கு ஒடிசாவின் பவானி பாட்னா நகரில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 50 கி.மீ தொலைவிலும், புல்பானி நகருக்கு மேற்கு தென்மேற்கே 80 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.


இன்று காலை டிட்லி புயல் வலுவிழந்து ஒடிசா- மேற்கு வங்காளம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுகிறது. இதன்காரணமாக வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், கடலோர ஆந்திராவில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள லூபன் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசைநோக்கி மெதுவாக நகர்வதால் இன்னும் 4 நாட்களில் ஏமன்-ஓமன் கடற்கரை பகுதியை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #TitliCyclone
Tags:    

Similar News