செய்திகள்

வாயை ஊதச் சொன்னதால் போக்குவரத்து போலீசாரை கண்மூடித்தனமாக தாக்கிய வக்கீல்

Published On 2018-10-11 04:06 GMT   |   Update On 2018-10-11 04:06 GMT
கர்நாடக மாநிலத்தில் மூச்சு பரிசோதனைக்காக வாயை ஊதும்படி சொன்ன போலீஸ்காரர்களை வழக்கறிஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KarnatakaLawyer
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தவாங்கர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ருத்ரப்பா என்ற நபரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவே, மூச்சு பரிசோதனை செய்வதற்காக அவரிடம் வாயை ஊதச் சொல்லியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் ஒரு வக்கீல், என்னையே சோதிக்கிறாயா? என்று கூறி போலீசாரை திட்டியுள்ளார்.

ஆனாலும் போலீசார் விடவில்லை. கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்கள். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ்காரர்களை ஆக்ரோஷமாக தாக்கினார். சாலையோரம் உள்ள கடையில் இருந்த டெரகோட்டா பொம்மைகளை தூக்கி அடித்தார். இதில் ஒரு போலீஸ்காரரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. முரட்டுத்தனமாக மோதி கீழே தள்ளிவிட்டதில் மற்றொரு போலீஸ்காரரும் காயமடைந்தார்.



அங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகப் பரவி வருகிறது. போலீசாரை தாக்கிய வழக்கறிஞரின் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக  வழக்கறிஞர் ருத்ரப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருந்தாரா? என்பதை அறிய, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையில் அவர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டால், அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும். #KarnatakaLawyer

Tags:    

Similar News